23 கிலோ கஞ்சாவுடன் 6 பேர் கைது
மதுரையில் 23 கிலோ கஞ்சாவுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் கஞ்சா விற்பனை கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் நகர் முழுவதும் தீவிர ரோந்து சென்று கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் ரீகன் ஆகியோர் செல்லூர் வைகை வடகரை ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓடினார்கள். அவர்களில் 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் மேலதோப்பு தேவேந்திரன் மனைவி செல்வி (வயது 52), அவரது மகன் சூர்யா (30), கீழத்தோப்பு ஜோதிபாசு (27), தங்கபாண்டி மனைவி சித்ரா (37), குபேந்திரன் மகள் மணிமாலா (40), ராஜேந்திரன் மனைவி தமிழரசி (55) என்பதும், அவர்கள் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிய மீனா, பாண்டிசெல்வி, நிர்மலா ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.