மாநகராட்சியின் அலட்சியத்தால் இதுவரை 6 பேர் பலி - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


மாநகராட்சியின் அலட்சியத்தால் இதுவரை 6 பேர் பலி - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
x

மாநகராட்சியின் அலட்சியத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்து விட்டனர் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.

மதுரை


மாநகராட்சியின் அலட்சியத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்து விட்டனர் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மழைநீர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது மாநகரில் விடுப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் திட்டம் மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டப்பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்படும் சாலைகள் சரியாக மூடுவதில்லை. பணிகளும் மிக மந்த நிலையில் நடக்கிறது. மழை காலத்திற்கு முன்பு இந்த பணிகளை முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தொடந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல மாநகராட்சி மெத்தனமாக இருக்கிறது. இந்த பணிகளை துரிதப்படுத்தவில்லை. அதன் காரணமாக மக்கள் தற்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பள்ளத்தில் தேங்கும் மழைநீர் மக்களின் உயிரை காவு வாங்க காத்திருக்கிறது.

6 பேர் உயிரிழப்பு

அதோடு பாதாள சாக்கடை பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். அதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூடல் நகரில் சக்திவேல் என்ற தொழிலாளி பாதாள சாக்கடை தோண்டும் பணியின் போது உயிரிழந்தார். கடந்த மாதம் (அக்டோபர்) அதே கூடல்நகரில் குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கூலி தொழிலாளி ரமேஷ் பலியானார். அதற்கு முன்பாக கடந்த ஜூன் மாதத்தில் விளாங்குடியில் பாதாள சாக்கடை பணியில் ஈடுப்பட்ட வீரணன் உயிரிழந்தார். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் மாடக்குளம் கழிவு நீரேற்று கிணற்றில் பணியில் ஈடுப்பட்ட சிவக்குமார், சரவணன், லட்சுமணன் ஆகிய 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை மாநகராட்சியின் அலட்சியத்தால் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களின் குடும்பத்தினர் ஆதரவற்று பெரும் துயரத்தில் உள்ளனர். இனி எதிர்காலத்தில் எந்த உயிர்பலியும் ஏற்படாதவாறு மாநகராட்சி செயல்பட வேண்டும். பருவ மழை காலத்தில் தோண்டப்பட்ட பள்ளங்களை போர்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

வீடுகள் சேதம்

மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை 173 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அதற்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை 26 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை அந்த தொகை கொடுக்கப்பட வில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் சேதம் அடைந்த பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story