உழவர் உழைப்பாளர் நலசங்க மாநில நிர்வாகி உள்பட 6 பேர் கைது
பேரணாம்பட்டு அருகே புதையல் எடுப்பதற்காக கோவிலை தோண்டி சிலைகளை கடத்தி சென்ற உழவர் உழைப்பாளர் நலசங்க மாநில துணை பொதுப் செயலாளர் உள்பட 6 பேரை பேரணாம்பட்டு போலீசார் கைது செய்தனர்.
பேரணாம்பட்டு அருகே புதையல் எடுப்பதற்காக கோவிலை தோண்டி சிலைகளை கடத்தி சென்ற உழவர் உழைப்பாளர் நலசங்க மாநில துணை பொதுப் செயலாளர் உள்பட 6 பேரை பேரணாம்பட்டு போலீசார் கைது செய்தனர்.
சிலை கடத்தல்
பேரணாம்பட்டு அருகே உள்ள மொரசப்பல்லி ஊராட்சி, நலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுனில்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தில் பழமை வாய்ந்த நாகாலம்மன் கோவில் நடுக்கல்லுடன் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் இந்த கோவிலில் கிராம மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.
இங்கு புதையல் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்் தேதி நம்பர் பிளேட் இல்லாத உழவர் உழைப்பாளர் நலச் சங்க மாநில துணை பொது செயலாளர் என ஸ்டிக்கர் ஒட்டிய வெள்ளை நிற சொகுசு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கடப்பாரை, மண்வெட்டி ஆகியவற்றால் 2 அடி பள்ளம் தோண்டி அங்கிருந்த 3 நாகாலம்மன் சிலைகளை காரில் கடத்தி சென்றனர்.
பணம் தருவதாக
இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு, சப்- இன்ஸ் பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மொரசப்பல்லி ஊராட்சி ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த ராம் (வயது 26) என்பவர் கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ராமை பிடித்து விசாரணை நடத்தினர்.
ராமின் சகோதரியின் கணவர் ராமச்சந்திரன் (32) குடியாத்தம் பார்வதியாபுரத்தை சேர்ந்தவர். இவரது நண்பரான கூட நகரம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (29) என்பவர் பாழடைந்த பழைய கோவில் உள்ளதா, என்னிடம் புதையல் எடுக்கும் ஆட்கள் உள்ளனர் எனகூறி பணம் தருவதாக ஆசை காட்டி உள்ளார். இதனால் ராமச்சந்திரன் தன்னுடைய மைத்துனர் ராமிடம் கேட்டதற்கு நலங்கா நல்லூர் கிராமத்தில் நாகாலம்மன் கோவில் உள்ளது குறித்து கூறியிருக்கிறார்.
6 பேர் கைது
அதைத்தொடர்ந்து விஜயன், புதையல் எடுக்கும் மாந்திரிக வாதியான அணைக்கட்டு தாலுகா டி.சி.குப்பம் அருகே உள்ள திப்பு ஆபாத் பகுதியில் வசிக்கும், கேரளா மாநிலத்தை சேர்ந்த உழவர் உழைப்பாளர் நலச்சங்க மாநில துணை பொதுச் செயலாளர் ஹபிபுல்லா (45), மேலும் இந்த அமைப்பை சேர்ந்த இவரது நண்பரான வேலூர் பாகாயம் பகுதியில் வசிக்கும் ஆதம்பாஷா (32), ராமச்சந்திரன் ஆகிய 4 பேரும், ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த ராம் (26), அவரது தந்தை செல்வம் (55) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஹபிபுல்லாவிற்கு சொந்தமான நம்பர் பிளேட் இல்லாத சொகுசு காரில் நலங்கா நல்லூர் கிராமத்திலுள்ள நாகாலம்மன் கோவிலுக்கு சென்று நிலத்தடி நீர் மட்டம் பார்க்க வந்ததாக பொய் சொல்லி புதையலுக்கு ஆசைப்பட்டு தோண்டியதாகவும், ஆனால் வெறும் கூழாங்கற்கள் மட்டுமே கிடைத்ததும் போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர்.
இதனையடுத்து பேரணாம்பட்டு போலீசார் மேற்கண்ட 6 பேரையும் கைது செய்து, சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.