கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 பேர் கைது
கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 ேபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சாத்தூர் அருகே உள்ள நென்மேனி மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதிஷ்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சதிஷ்குமார் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து அதே பகுதியை சேர்ந்த கண்ணன், இந்திராகண்ணன், ஆசிர்வாதம், சுந்தரபாண்டி, பால்பாண்டி, ராஜபாண்டி, முட்டை கண்ணன், சின்னப்பாண்டி ஆகியோர் தகராறு செய்து சதிஷ்குமாரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு கழுத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சதிஷ்குமாரின் மனைவி மாரீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் சதிஷ்குமாருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது ஊரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பன், லட்சுமணன், குருவிராஜ் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் நென்மேனி மேட்டுப்பட்டியை சேர்ந்த ஆறுமுகப்பாண்டி வீட்டிற்கு சென்று வீட்டை சேதப்படுத்தி ஆறுமுகப்பாண்டியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பை சேர்ந்தவர்கள் தனி, தனியாக கொடுத்த புகாரின் பேரில் 33 பேர் மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் இருதரப்பை சேர்ந்த காளிமுத்து மகன் கண்ணன் (வயது 24), முருகன் மகன் கண்ணன் (44), ஆசீர்வாதம் (39), வெங்கடேஷ் (28), பாலகிருஷ்ணன் (39), பெரிய கருப்பசாமி (25) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.