சிறுமி இறந்த சம்பவத்தில் 6 பேர் அதிரடி கைது


சிறுமி இறந்த சம்பவத்தில் 6 பேர் அதிரடி கைது
x

சிறுமி இறந்த சம்பவத்தில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

சிறுமி சாவு

புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கோவில்களில் வெண்கல பொருட்களை ஒரு கும்பல் திருடிவிட்டு ஆட்டோவில் தப்பிச்செல்வதாக கூறி அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள், பொதுமக்கள் கடந்த 14-ந் தேதி அந்த ஆட்டோவை மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்றனர். மேலும் புதுக்கோட்டை அருகே மச்சுவாடி பகுதியில் அந்த ஆட்டோவை மறித்து, அதில் இருந்தவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதில் ஆட்டோவில் இருந்த கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விலங்காட்டூர் பகுதியை சேர்ந்த சத்தியநாராயணசாமி (வயது 48), அவரது மனைவி லில்லி புஷ்பா (38), மகன்கள் விக்னேஷ்வரசாமி (19), சுபமெய்யசாமி (19), மகள்கள் கற்பகாம்பிகா (10), ஆதிலட்சுமி (8) ஆகியோர் படுகாயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கற்பகாம்பிகா கடந்த 16-ந் தேதி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும் சிறுமியை தாக்கியவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

6 பேர் கைது

சம்பவத்தன்று அந்த ஆட்டோவை விரட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் மற்றும் ஆட்டோவில் இருந்தவர்களை தாக்கியவர்களை பிடிக்க சமூக வலைத்தளத்தில் பரவிய வீடியோ மூலம் விசாரித்தனர். இதற்கிடையில் அந்த சம்பவம் குறித்து சிலர் சமூக வலைத்தளத்திலும் கருத்து தெரிவித்து தாங்கள் விரட்டி சென்று பிடித்ததாக கூறி வீடியோவையும் பகிர்ந்திருக்கின்றனர். இதையடுத்து போலீசார் அந்த வீடியோக்களில் உள்ள காட்சி மூலம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் புதுக்கோட்டை அருகே அண்டகுளத்தை சேர்ந்த செல்வம் (35), முருகேசன் (38), வீரையா (43), சந்திரசேகர் (31), வைத்தூர் பாஸ்கர் (35), புதுக்கோட்டை சிவானந்தபுரத்தை சேர்ந்த பரமசிவம் என்ற பாபு (37) ஆகிய 6 பேரை கணேஷ்நகர் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் கைதானவர்களை புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அடையாளம் தெரியாதவர்கள் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் மறியல்

இதற்கிடையில் இந்த சம்பவத்தில் 6 பேரை போலீசார் பிடித்து சென்றதற்கு அண்டகுளம் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று அண்டகுளத்தில் செக்கடி முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த 6 பேரும் சிறுமியை தாக்கவில்லை எனவும், அவர்கள் அச்சம்பவத்தில் ஈடுபடவில்லை எனவும், போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டினர். கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டுவேலன், இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம், உடையாளிப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். காலை 10.45 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. மேலும் இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடல் அடக்கம்

இதற்கிடையே இறந்த சிறுமி கற்பகாம்பிகாவின் உடல் பெற்றோரிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மேலும் கோவில்களில் திருட்டு சம்பவம் தொடா்பாக உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story