தறிகெட்டு ஓடிய கார் மோதி 6 பேர் படுகாயம்
விக்கிரவாண்டியில் பரபரப்பு: தறிகெட்டு ஓடிய கார் மோதி 6 பேர் படுகாயம் சினிமா காட்சியை போன்று நிகழ்ந்த சம்பவம்
விக்கிரவாண்டி
சென்னையில் இருந்து நேற்று திருச்சி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. மதியம் 3.30 மணியளவில் விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலை அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது மோதியது. தொடர்ந்து அங்கு சாலையை கடக்க நின்றிருந்தவர்கள் மீது மோதிய கார் மோட்டார் சைக்கிள், மொபட்டை இடித்து சுழன்றபடி சாலையின் தடுப்புசுவர் மீது மோதி மறுபக்கம் உள்ள விழுப்புரம்-சென்னை சாலையில் போய் நின்றது. சினிமாவில் வரும் காட்சியை போன்று நிகழ்ந்த இந்த விபத்தில் சாலையை கடக்க நின்றிருந்த விக்கிரவாண்டி அருகே உள்ள மிட்டா மண்டகப்பட்டை சேர்ந்த வேலு(வயது 45), இவரது மனைவி சுதா(36), மகன் விக்னேஷ்(13), மொபட்டில் சாலையை கடக்க நின்றிருந்த ஆர்.சி.மேலக்கொந்தையை சேர்ந்த சரவணன்(38), செல்வகுமார்(41), வீடுரை சேர்ந்த ஆறுமுகம்(65) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.