ஆட்டோ கவிழ்ந்து 6 மாணவர்கள் படுகாயம்
நாய் குறுக்கே வந்ததால், ஆட்டோ கவிழ்ந்து 6 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
வத்தலக்குண்டு காமராஜபுரத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. ஆட்டோ டிரைவர். நேற்று காலை இவர், வத்தலக்குண்டுவில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார் பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார். வத்தலக்குண்டு-திண்டுக்கல் சாலையில், விவேகானந்த நகர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று சென்றது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக தங்கப்பாண்டி திடீர் பிரேக் போட்டார். இதில் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் தங்கப்பாண்டி மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த மாணவர்கள் தீனதயாளன் (வயது 14), ராம்குமார் (15), அய்யனார் (15), சாருகேஷ் (14), சந்தோஷ் (17), ஜெயபால் (16) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் தங்கப்பாண்டி, தீனதயாளன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வத்தலக்குண்டு, செக்காம்பட்டி, விராலிபட்டி பகுதியை சேர்ந்த மாணவர்கள் 9 முதல் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.