திருச்சி மாவட்டத்தில் தாசில்தார்களாக பணியாற்றிய 6 பேர் துணை கலெக்டராக பதவி உயர்வு
திருச்சி மாவட்டத்தில் தாசில்தார்களாக பணியாற்றிய 6 பேர் துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். குளித்தலை ஆர்.டி.ஓ. சோபா தாசில்தாராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் தாசில்தார்களாக பணியாற்றிய 6 பேர் துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். குளித்தலை ஆர்.டி.ஓ. சோபா தாசில்தாராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பதவி உயர்வு
தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றி பதவி உயர்வு அளிக்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 2004 முதல் 2019 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியல்களில், பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் தற்போது தாசில்தார்களாக பணிபுரியும் 110 பேருக்கு துணை கலெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல 45 பேருக்கு பணியிறக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
6 பேருக்கு பதவி உயர்வு
திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் தாசில்தாராக இருந்த சிவசுப்பிரமணிய பிள்ளை, துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (தேர்தல்), மலர் துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (நிலம்), ரேணுகா துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று சென்னை பள்ளிக்கல்வித்துறை இயக்குனரக நிர்வாக அலுவலராகவும், கருணாநிதி கரூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (நிலம்), சுமதி துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடமான அரியலூர் ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டம் துணை கலெக்டராகவும், சாந்தி துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பதவி இறக்கம்
திருச்சி மாவட்ட வருவாய் அலகில் பணியாற்றி பதவி உயர்வு பெற்றுசென்றவர்களில் 5 பேர் இந்த, விதிமுறைகளின்படி பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கணேசன், பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவசங்கரன், சென்னை சேப்பாக்கம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை உதவி ஆணையர் செல்வமதி, சென்னை (வடக்கு) ஆர்.டி.ஓ. ரங்கராஜன், கரூர் மாவட்டம் குளித்தலை ஆர்.டி.ஓ. சோபா ஆகியோர் மீண்டும் தாசில்தாராக பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2022-ம் ஆண்டு வரையிலான துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியல்களுக்கான அரசு ஆணை அடுத்த வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது.