குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் 60 அடி சாலை


குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் 60 அடி சாலை
x

குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் 60 அடி சாலை

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் மாநகரில் குண்டும், குழியுமாக காணப்படும் 60 அடி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 மாநகராட்சிகளில் கும்பகோணம் மாநகராட்சியும் ஒன்றாகும். 1866-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த நகராட்சியானது சிறப்பு நிலை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் முக்கிய வணிக மையமாகவும் கருதப்படுகிறது.

கோவில்கள் நிறைந்த மாநகரமாக திகழும் கும்பகோணத்தில் உள்ள முக்கிய சாலையாக 60 அடி சாலை திகழ்கிறது. புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை, மயிலாடுதுறை, தஞ்சை மார்க்கமாக பஸ்கள் செல்லும் சாலை, 60 அடி சாலை சந்திக்கும் பகுதியில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

வாகன ஓட்டிகள் சிரமம்

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, தஞ்சை, மன்னார்குடி, காரைக்கால், சிதம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளை நோக்கி செல்லும் பஸ்கள் அனைத்தும் 60 அடி சாலையின் வழியாக தான் செல்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் ஏராளமானோர் இந்த சாலையின் வழியாக சென்று வருகின்றனர்.

இப்படி எப்போதும் போக்குவரத்து இருக்கக்கூடிய 60 அடி சாலை சந்திப்பு பகுதியில் குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 2 நாட்களுக்கு இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்று வந்தால் கண்டிப்பாக முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வரும் அளவுக்கு மோசமாக காணப்படுகிறது.

விபத்து ஏற்பட வாய்ப்பு

அதுமட்டுமின்றி வாகனங்களும் பழுதடையக்கூடிய வாய்ப்பு உள்ளது. இப்படி பள்ளமாக இருந்தாலும் வேறு வழியில்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு இடையில் இந்த சாலையில் வாகனங்களை ஓட்டி சென்று வருகின்றனர். இப்படி குண்டும், குழியுமான சாலையின் வழியாக வாகனங்களை ஓட்டி செல்லும் போது விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல் கும்பகோணம் ஆயிக்குளம் ரோடு மாநகராட்சி பள்ளி அருகே உள்ள சாலையும் மோசமாக காணப்படுகிறது. எனவே குண்டும், குழியுமாக காணப்படும் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Related Tags :
Next Story