நடைபாதையை ஆக்கிரமித்த 60 கடைகள் அகற்றம்
ஊட்டியில் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த 60 கடைகள் அகற்றப்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த 60 கடைகள் அகற்றப்பட்டது.
நகராட்சிக்கு புகார்கள்
ஊட்டி நகரில் சாலைகளிலும், நடைபாதைகளிலும் ஆக்கிரமிப்பு செய்து, கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. மேலும் நகராட்சி மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் தங்களது கடையில் இருந்து சுமார் 1½ அடி தூரத்தை ஆக்கிரமித்து பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசாருக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பல்வேறு புகார்கள் சென்றன.
இதையடுத்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், ஆர்.டி.ஓ. துரைசாமி தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில் நகரமைப்பு திட்ட அலுவலர் ஜெயவேல், நகரமைப்பு அலுவலர் மீனாட்சி தலைமையிலான பணியாளர்கள் தாவரவியல் பூங்கா சாலை, மிஷ்னரி ஹில், தாசப்பிரகாசம் சாலை உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
கடைகள் அகற்றம்
பின்னர் நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த கடைகளை நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி 60-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. அப்போது போலீசாரே நகர்வு கடைகளை அப்புறப்படுத்தியதோடு, கடைகளில் இருந்த பொருட்களையும் அகற்றினர்.
இதனால் கடைக்காரர்கள், நகராட்சி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையான போலீசார் கடைக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். நடைபாதையை மீண்டும் ஆக்கிரமித்து கடை வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.