வீட்டுமனை பட்டா கேட்டு 60 ஆண்டுகளாக போராடும் முதியவர்


வீட்டுமனை பட்டா கேட்டு 60 ஆண்டுகளாக போராடும் முதியவர்
x

வீட்டுமனை பட்டா கேட்டு 60 ஆண்டுகளாக போராடும் முதியவர், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பாலத்தின் அருகே நேற்று ஒரு முதியவர் வந்தார். அந்த முதியவர் ஒரு பையில் சுவரொட்டிகளும், ஒரு டப்பாவில் பசையும் வைத்து இருந்தார்.

பின்னர் அவர் பாலத்தின் தூண்களில் சுவரொட்டிகளை ஒட்டினார். அதில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் என்று அச்சிட்டு இருந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், முதியவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் வேடசந்தூரை சேர்ந்த கிருஷ்ணசாமி (வயது 93) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர் போலீசாரிடம் கூறுகையில், சுதந்திர போராட்ட தியாகியான நான் கடந்த 60 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை கேட்டு போராடி வருகிறேன். இதுவரை எனக்கு பட்டா வழங்கப்படவில்லை.

அதனால் வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன், என்றார். இதையடுத்து போலீசார், அவருக்கு உரிய அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர். மேலும் அவர் ஓட்டிய சுவரொட்டிகளை போலீசாரே அகற்றினர்.


Next Story