தமிழர்களின் 60 ஆண்டுகால கனவான அத்திக்கடவு - அவினாசி திட்டம் தாமதம் ஏன்? - சீமான் கேள்வி
தமிழர்களின் 60 ஆண்டுகால வாழ்வாதார கனவான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நடப்பாண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேற்கு மாவட்ட மக்களின் நெடுநாள் கனவான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதில் திமுக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. பாசனத்திற்கு நீரின்றி மேற்கு மாவட்ட விவசாயிகள் தவித்துவரும் நிலையில், நடப்பாண்டில் பவானி ஆறு நிரம்பி வழிந்தும், திட்டம் தாமதமானதால் சேமிக்க வழியின்றி கடலில் சென்று கலந்து வீணாவது மிகுந்த வேதனையளிக்கிறது.
வேளாண்மைக்கும், குடிநீருக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு மக்கள் தவித்துவரும் நிலையில், நடப்பாண்டில் பெய்த நல்ல மழையால் கிடைத்த நீரையும், தி.மு.க அரசின் அலட்சிய போக்கால் சேமிக்க முடியாமல் போய்விட்டது. அத்திக்கடவு - அவினாசி திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் தி.மு.க. அரசு இழுத்தடிப்பு செய்வதே திட்டம் தொடர்ந்து தாமதமாவதற்கு முக்கிய காரணம்.
ஆகவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கி, தமிழர்களின் 60 ஆண்டுகால வாழ்வாதார கனவான அத்திக்கடவு - அவனாசி திட்டத்தை நடப்பாண்டுக்குள் நிறைவேற்றித்தர வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.