இரும்பு கம்பியால் தாக்கி முதியவர் கொலை
இரும்பு கம்பியால் தாக்கி முதியவர் கொலை
தளி
உடுமலை அருகே பஸ் நிறுத்தத்தில் மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் முதியவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:-
கொலை
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பள்ளபாளையம்- குறிச்சிகோட்டைக்கு இடைப்பட்ட பகுதியில் கொங்கலக்குறிச்சி கிராமம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த சில நாட்களாக தங்கி இருந்து வந்தார். இவர் ஊருக்குள் சென்று யாசகம் பெற்று வந்து இரவில் பஸ் நிறுத்தத்தில் தங்கி கொள்வார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொங்கலகுறிச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனியப்பன் (35) என்பவர் குறிச்சிக்கோட்டையில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சென்று மது வாங்கிக் கொண்டு பஸ்நிறுத்திற்கு வந்தார். ஏற்கனவே குடிபோதையில் இருந்த பழனியப்பன் அங்கு அமர்ந்து மது குடிக்க முயன்றார். அதை அங்கிருந்த முதியவர் தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பழனியப்பன் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து முதியவரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் முதியவர் பலியானார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் பழனியப்பனை கைது செய்தனர். பின்னர் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரித்து வருகிறார்கள்.முதியவரை கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்த சம்பவம் தளிப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.