ரெயிலில் கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரத்தில் ரெயிலில் கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், தனிப்பிரிவு ஏட்டு ரவி, ஏட்டுகள் மணிகண்டன், ரங்கபாஷியம் ஆகியோர் நேற்று காலை ரெயில் நிலைய நடைமேடைகளில் ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது அங்குள்ள 1-வது நடைமேடையின் கடைசி பகுதியில் 20 சாக்கு மூட்டைகள் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அந்த மூட்டைக்குள் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அரிசி மூட்டைகளை எடை போட்டு பார்த்ததில் 600 கிலோ இருந்தது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை மூட்டைகளாக கட்டிக்கொண்டு ராமேஸ்வரம்- காசி பனாரஸ் பகுதிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு கடத்திச்செல்ல இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து அதனை விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு ரேஷன் அரிசி மூட்டைகளை, ரெயிலில் கடத்த முயன்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.