குறுவை சாகுபடிக்காக 600 டன் யூரியா, 700 டன் காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சை வந்தது

குறுவை சாகுபடிக்காக 600 டன் யூரியா, 700 டன் காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சை வந்தது
x

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்கு ரெயிலில் குறுவை சாகுபடிக்காக 600 டன் யூரியா மற்றும் 700 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தஞ்சை வந்தன. தஞ்சையில் இருந்து லாரிகள் மூலம் இந்த உர மூட்டைகள் 4 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தஞ்சாவூர்

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர வாழை, கரும்பு, வெற்றிலை, மக்காச்சோளம், எள், உளுந்து, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது தஞ்சை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

ஆழ்துளை கிணறு உள்ள பகுதிகளில் தற்போது சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆற்றுநீரை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் டெல்டா பாசத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பரப்பளவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1,300 டன் யூரியா, காம்ப்ளக்ஸ் உரம்

குறுவை சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரம் மற்றும் இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 600 டன் யூரியா, 700 டன் காம்ப்ளக்ஸ் உரம் 21 வேகன்களில் தஞ்சை வந்தது.

தஞ்சை வந்த உர மூட்டைகள் பின்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு லாரிகளில் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி உரமூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது.

Next Story