பிளஸ்-1 பொதுத்தேர்வை 6,185 பேர் எழுதினர்


பிளஸ்-1 பொதுத்தேர்வை 6,185 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 6,185 பேர் எழுதினார்கள். தமிழ் பாடத்தேர்வு எளிதாக இருந்தது என மாணவ-மாணவிகள் தெரிவித் தனர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 6,185 பேர் எழுதினார்கள். தமிழ் பாடத்தேர்வு எளிதாக இருந்தது என மாணவ-மாணவிகள் தெரிவித் தனர்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தநிலையில் நேற்று முதல் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுத 6 ஆயிரத்து 295 மாணவ-மாணவிகள் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். இந்த தேர்விற்காக 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

பறக்கும் படையினர் கண்காணிப்பு

பிளஸ்-1 பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. 44 முதன்மை கண்காணிப்பாளர்கள், 43 துறை அலுவலர்கள், 86 அலுவலக பணியாளர்கள், 574 அறை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் 14 பேர் என 761 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பிளஸ்-1 தனி தேர்வர்கள் ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளி, கூடலூர் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் தேர்வு எழுதினர். மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் 69 பேர் அடங்கிய பறக்கும் படை குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

முன்னதாக இந்த தேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமும், பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும் என்பதற்காக மாணவ-மாணவிகள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். மேலும் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, வாழ்த்து கூறினர்.

6,185 பேர் எழுதினர்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வில் தமிழ், மலையாளம், பிரெஞ்சு, இந்தி உள்ளிட்ட மொழிப்பாட தேர்வை மொத்தம் 6,185 பேர் எழுதினர். 110 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பிளஸ்-1 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

விரைவாக எழுதினேன்

கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி மாணவர் ஆதித்யா:-

தமிழ் பாடத்தேர்வு வினாத்தாளில் 2, ஒரு மதிப்பெண் வினாக்கள் பாடபுத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டு இருந்தன. மற்ற வினாக்கள் அனைத்தும் எளிதாக கேட்கப்பட்டு இருந்ததால், தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. இதனால் பிளஸ்-1 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.

கேர்கம்பை பள்ளி மாணவி நிகிதா:-

தமிழ் பாடத்தில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிதாக கேட்கப்பட்டு இருந்தன. பள்ளியில் ஆசிரியர்கள் முக்கியம் என குறித்துக் கொடுத்த வினாக்களில் பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததால், தேர்வை விரைவாக எழுதி முடித்தேன். 85 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எளிதாக இருந்தது

கோத்தகிரி பள்ளி மாணவி அஸ்வதி:-

தமிழ் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலும் வழக்கமாக கேட்கப்படும் கேள்விகளே அதிகம் இருந்தன. ஆசிரியர்கள் தேர்வு செய்து கற்பித்த வினாக்களே அதிகம் வந்ததால், தேர்வை மிகவும் எளிதாக எழுத முடிந்தது. அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

கேர்கம்பை பள்ளி மாணவி பிரசாந்தினி:-

பிரெஞ்ச் மொழிப்பாடத் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. இருப்பினும், எனக்கு நேரம் போதுமானதாக இல்லாததால் ஒரு சில வினாக்களை எழுத முடியவில்லை. 60 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


Next Story