பெண் அதிகாரி வீட்டில் 62 பவுன் நகைகள் திருட்டு


பெண் அதிகாரி வீட்டில் 62 பவுன் நகைகள் திருட்டு
x

வேலூரில் பெண் அதிகாரி வீட்டில் 62 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர்

வேலூரில் பெண் அதிகாரி வீட்டில் 62 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

62 பவுன் நகை திருட்டு

வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது 58), பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி. இவர், வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களின் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 2-ந்தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். சுற்றுலா சென்ற எட்டியப்பன் குடும்பத்தினர் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பினர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பின்னர் பீரோவை பார்த்த போது, அதில் இருந்த 62 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

2 தனிப்படைகள் அமைப்பு

இதுகுறித்து எட்டியப்பன் பாகாயம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு வந்து மர்மநபர்களின் கைரேகைகள் பதிவாகி உள்ளதா என்று தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.27 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து தனிப்படை போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story