மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 627 மனுக்கள் பெறப்பட்டன
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 627 மனுக்கள் பெறப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். அதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 627 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் வெங்கடேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முக சுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், உதவி கலெக்டர்கள் வெற்றிவேல், கவிதா, வினோத்குமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.