கருப்பூர் அருகே இன்சூரன்சு முகவர் வீட்டில் 63 பவுன் நகைகள் கொள்ளை-கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை


கருப்பூர் அருகே இன்சூரன்சு முகவர் வீட்டில் 63 பவுன் நகைகள் கொள்ளை-கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
x

சேலம் கருப்பூர் அருகே இன்சூரன்சு முகவர் வீட்டின் கதவை உடைத்து 63 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்

கருப்பூர்:

63 பவுன் நகை கொள்ளை

சேலம் கருப்பூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி லிங்கபைரவி கோவில் நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 49). இவர் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் பணியும், இன்சூரன்சு முகவராகவும் பணிபுரிந்து வருகிறார். மேலும் கணவரை பிரிந்து தனது மகள் அபிராமியுடன் (22) வசித்து வருகிறார்.

அபிராமி சென்னையில் உள்ள கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி விஜயலட்சுமி தனது மகளை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு பீரோவை உடைத்து, அதில் இருந்த 63 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

பொருட்கள் சிதறி கிடந்தன

இந்தநிலையில் நேற்று மாலை விஜயலட்சுமியின் வீட்டுக்கு, அவருடைய கார் டிரைவர் சிவா சென்றார். அப்போது அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிவா, விஜயலட்சுமி, கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, உதவி கமிஷனர் நாகராஜன், குற்றவியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து, சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

வலைவீச்சு

இந்த துணிகர கொள்ளை குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 63 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் சென்னையில் உள்ள விஜயலட்சுமி சேலத்துக்கு வந்தால் தான், நகை மட்டும் கொள்ளையடிக்கப்பட்டதா? அல்லது பணம் உள்ளிட்டவையும் திருடப்பட்டதா? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story