மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 63 பேர் கைது
ராமநாதபுரத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ராமநாதபுரத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும், தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணியாற்றிய அனைவரையும் உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும், கருணைத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு திட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குருவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் செயலாளர் காசிநாதன், நிர்வாகிகள் ஜெபமணி, முருகேசன் ஆரோக்கியம், முருகன், மாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.