35 பேருக்கு ரூ.65 லட்சம் தீருதவித்தொகை
வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் 35 பேருக்கு ரூ.65 லட்சம் தீருதவித்தொகை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் பழனி கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, ச.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பழனி கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மக்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீருதவிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக்கு உட்படுத்த
மேலும் புகார் பதிவு செய்வது, இழப்பீடு வழங்குவது, வேலைவாய்ப்பை உரிய நேரத்தில் கொடுப்பது சம்பந்தமாக விஜிலென்ஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. விசாரிக்கும் அதிகாரி மற்றும் சிறப்பு வக்கீல்களின் செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்வதோடு குற்றவாளிகளின் குற்றத்தன்மையை கருத்திற்கொண்டு தண்டனை பெற்றுத்தருகிறார்களா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும். தமிழ்நாடு அரசு ரூ.16,500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனை தகுதியானவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். மகளிர் கல்வி 57 சதவீதமாக உள்ளது. இதனை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதுமைப்பெண் திட்டத்தின் பயன்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை அதிகம் நடைபெற்றிடும் வகையில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
தீருதவித்தொகை
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் இதுவரை நிலுவையில் உள்ள 25 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 35 பேருக்கு ரூ.65,31,550 தீருதவித்தொகை நிதி ஒதுக்கீடு பெற்று வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த 23 பேரின் வாரிசுதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக தலா ரூ.5 ஆயிரமும், பஞ்சப்படியும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 4 பேருக்கு அரசு பணியும் வழங்கப்பட்டுள்ளது. புதியதாக 2 குடும்பங்களுக்கு விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை அலகில் இளநிலை உதவியாளர் பணி வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, சமூக சேவகர் தனஞ்செழியன், மாநில தலைவர் மணி, மாவட்ட அமைப்பாளர் வக்கீல் அகத்தியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.