இந்து மகாசபா அமைப்பினர் 66 பேர் கைது


இந்து மகாசபா அமைப்பினர் 66 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 9:47 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகாசபா அமைப்பினர் 66 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகாசபா அமைப்பினர் 66 பேரை போலீசார் கைது செய்தனர்.

காசி, மதுராவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி குமரி மாவட்ட அகில பாரத இந்து மகாசபாவின் சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதோக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் கூடுதல் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

இந்தநிலையில் நேற்று காலை அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ், குமரிக்கோட்ட செயலாளர் ஸ்ரீகண்டன், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், மேற்கு மாவட்ட தலைவர் சபரி குமார் உள்பட பலர் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக குவிந்தனர். திடீரென அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்பட 66 பேர்களை கைது செய்தனர். கைது செய்தவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றி வடசேரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் அவர்கள் அனைவரையும் போலீசார் விடுதலை செய்தனர்.


Next Story