செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 66 பவுன் நகை கொள்ளை


செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 66 பவுன் நகை கொள்ளை
x

நெல்லை அருகே செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 66 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அவர் வெளியூர் சென்றபோது கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி பாரதியார் நகர் 23-வது தெருவைச் சேர்ந்தவர் நம்பி (வயது 41). இவருடைய மனைவி காந்திமதி (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நம்பி சுத்தமல்லி விலக்கு பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது தம்பி மாரியப்பன். அவரது மனைவி பரமேசுவரி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாரியப்பனுக்கு உடல் நிலை சரிஇல்லாமல் போனது. இதனால் அவர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்காக நம்பி தனது மனைவி, மகள்களுடன் நேற்று முன்தினம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் இரவில் வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து நம்பி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

இதுகுறித்து உடனடியாக சுத்தமல்லி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 66 பவுன் தங்க நகைகள், வெள்ளி குத்து விளக்கு, பித்தளை பொருட்களை கொள்ளையடித்து விட்டு, தப்பிச் சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும்.

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். நெல்லை அருகே செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 66 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story