திருவண்ணாமலையில் நர்ஸ் வீட்டில் 68 பவுன் நகை-பணம் கொள்ளை


திருவண்ணாமலையில் நர்ஸ் வீட்டில் 68 பவுன் நகை-பணம் கொள்ளை
x

திருவண்ணாமலையில் நர்ஸ் வீட்டில் 68 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கம் கொள்ளை போனது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நர்ஸ் வீட்டில் 68 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கம் கொள்ளை போனது.

அரசு மருத்துவமனை நர்ஸ்

திருவண்ணாமலை தாலுகா வேங்கிக்காலில் உள்ள அரசு மண் பரிசோதனை நிலையம் பின்புறம் உள்ள திருமலை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி சுமதி (வயது 50). திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை நர்சாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ராஜேஷ், விவேக் என 2 மகன்கள் உள்ளனர். ராஜேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர். விவேக் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசிகா. இந்த நிலையில் நேற்று முன்தினம் விவேக் வேலை காரணமாக சென்னைக்கு சென்று உள்ளார்.

அவரது மனைவி சசிகா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் சுமதி, அவரது மூத்த மகன் ராஜேஷ் ஆகியோர் மட்டும் இருந்து உள்ளனர். இரவு பணி காரணமாக ராஜேஷை அவரது அறையில் தூங்க வைத்து விட்டு சுமதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

நகை-பணம் கொள்ளை

நேற்று காலை சுமதி பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது ராஜேஷ் இருந்த அறை வெளிபக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. திறந்து பார்த்தபோது அங்கு ராஜேஷ் பத்திரமாக இருந்தார்.

பக்கத்து அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதில் இருந்த செயின், வைர நெக்லஸ் உள்பட சுமார் 68 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்று விட்டனர்.

ராஜேசை அறையில் இருந்து வெளியே வந்துவிடாமல் இருக்க பத்திரமாக தாழ்பாள் போட்டு அடைத்து வைத்துவிட்டு மர்ம நபர்கள் தங்கள் கொள்ளையை நடத்தியுள்ளனர்.

போலீஸ் விசாரணை

இது குறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story