கஞ்சா, லாட்டரி, மது விற்ற வழக்குகளில் 69 பேர் கைது
கஞ்சா, லாட்டரி, மது விற்ற வழக்குகளில் 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகரில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு, கடந்த ஒரு வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகிலும் மற்றும் பொது இடங்களிலும் கஞ்சா விற்றதாக 6 பேர் மீது எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும், கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும் என 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஒரு வாரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 15 பேர் மீது கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம், பாலக்கரை போலீஸ் நிலையங்களில் தலா 2 வழக்குகளும், செசன்ஸ் கோர்ட்டு, எடமலைப்பட்டிபுதூர், பொன்மலை, காந்தி மார்க்கெட், உறையூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா 1 வழக்கும் உள்பட 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 380 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் சட்டத்திற்கு புறம்பாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்ததாக 48 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 402 மதுபாட்டில்களை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகரத்தில், சட்டம்- ஒழுங்கை பேணிக்காக்க, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வழிப்பறி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தெரிவித்துள்ளார்.