2 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.7 கோடி நலத்திட்ட உதவிகள்


2 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.7 கோடி நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 10 May 2023 12:30 AM IST (Updated: 10 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் நடந்த விழாவில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.7 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.

திண்டுக்கல்

நலத்திட்ட உதவிகள்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி., மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில் முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதி, இலவச வீட்டுமனை பட்டா, தையல் எந்திரம், பண்ணைக்கருவிகள், கல்வி நிதிஉதவி, சிறு வணிகக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் என 15 துறைகளின் சார்பில் மொத்தம் 2 ஆயிரத்து 4 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புறநகர் பஸ் நிலையம்

நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் புறநகர் பஸ் நிலையம் விரைவில் வர உள்ளது. கல்வி தரத்தில் திண்டுக்கல் 21-வது இடத்தை பிடித்ததற்கு கலெக்டர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை பாராட்டுகிறேன். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் ஜூன் மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும். பேராசிரியர் அன்பழகன் நினைவாக ரூ.823 கோடியில் பள்ளி கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

தமிழகத்தில் 10 ஆயிரம் கி.மீ. சாலை அமைக்க ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.135 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடு வழங்கும் திட்டத்தில் கடந்த 2016 முதல் 2021 வரை 2 லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும், என்றார்.

குடிநீர் திட்டம்

அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், தமிழகத்தில் 36 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும். ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை, திண்டுக்கல் ஒன்றியங்களுக்கு ரூ.512 கோடியிலும், ஒட்டன்சத்திரம் மற்றும் பழனிக்கு ரூ.930 கோடியிலும் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதேபோல் நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம், சாணார்பட்டி, குஜிலியம்பாறை பகுதிகளுக்கும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் 1,700 புதிய ரேஷன்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 172 புதிய ரேஷன்கடைகள் திறக்கப்பட்டன. அந்த கடைகளுக்கு விரைவில் சொந்த கட்டிடம் கட்டப்படும். மேலும் தி.மு.க. ஆட்சியில் 14 லட்சத்து 25ஆயிரம் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 48 ஆயிரத்து 864 புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டன. ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் கைரேகை பதிவுக்கு பதிலாக கருவிழி பதிவு முறை விரைவில் பயன்பாட்டுக்கு வரும், என்றார்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட ஊராாட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், துணை தலைவர் பொன்ராஜ், மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், துணைப்பதிவாளர் (பொதுவினியோக திட்டம்) அன்புக்கரசன், திண்டுக்கல் சரக துணைப்பதிவாளர் மதி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story