டவுன்பஸ் பழுதாகி நின்றதால் 7 கி.மீ. இருளில் நடந்து சென்ற மாணவிகள்


கயத்தாறு அருகே நேற்று முன்தினம் அரசு டவன்பஸ் நடுக்காட்டில் திடீரென பழுதாகி நின்றதால், அதில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருளில் 7 கி.மீ. நடந்து சென்று வீடு சேர்ந்தனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே நேற்று முன்தினம் அரசு டவன்பஸ் நடுக்காட்டில் திடீரென பழுதாகி நின்றதால், அதில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருளில் 7 கி.மீ. நடந்து சென்று வீடு சேர்ந்தனர்.

அம்மாள்பட்டி டவுன் பஸ்

கயத்தாறு-அம்மாள்பட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் புதுக்கோட்டை, தெற்கு மயிலோடை, கைலாசபுரம், கலப்பைபட்டி, அம்மாள்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் சென்று வருகின்றனர். இவர்கள் கயத்தாறு சென்று அங்கிருந்து நெல்லை, கோவில்பட்டி போன்ற ஊர்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விட்டு மாலையில் மீண்டும் கயத்தாறில் இருந்து அம்மாள்பட்டி டவுன்பஸ்சில் ஊர்களுக்கு திரும்புவது வழக்கம்.

இந்த வகையில் நேற்று மாலை 6.30 மணிக்கு கயத்தாறில் இருந்து சென்ற இந்த பஸ்சில் புதுக்கோட்டை, தெற்கு மயிலோடை, அம்மாள் பட்டி, கைலாசபுரம், கலப்பைபட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்றனர்.

காட்டுப்பகுதியில் பழுது

புதுக்கோட்டை அருகே காட்டுப்பகுதியில் சென்றபோது திடீரென அந்த பஸ் பழுதாகி நின்றது. மாற்றுப்பஸ் ஏற்பாடு செய்யாத நிலையில், மாணவ, மாணவிகள் பஸ்சிலிருந்து இறங்கி காட்டுப்பாதையில் நடந்து வீடுகளுக்கு சென்றனர்.

வழியில் மற்ற கிராம மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு சென்ற நிலையில், அம்மாள்பட்டி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 7 கி.மீ. இருளில் நடந்து சென்று வீடு சேர்ந்தனர்.

இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோர்கள் புகார்

இதுகுறித்து மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், மிகவும் பழுதடைந்த பஸ்சை இப்பகுதியில் இயக்குகின்றனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடமும், மற்ற அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அடிக்கடி அம்மாள்பட்டி டவுன் பஸ் பழுதாகி இடையில் நிற்பது தொடர்கதையாக நடக்கிறது. இதனால் எங்கள் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு வந்து சேரும் வரை நாங்கள் பதற்றத்துடனே காத்திருக்க வேண்டி உள்ளது. இப்பிரச்சினைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Related Tags :
Next Story