7 பேரை திருமணம் செய்து மோசடி: கல்யாண ராணியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
7 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட கல்யாண ராணியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 4 பேர் வெளி மாநிலம் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
பரமத்திவேலூர்
கல்யாண ராணி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 33). இவருக்கு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சோழவந்தானை சேர்ந்த கல்யாண ராணி சந்தியா (26) என்ற பெண்ணை கடந்த 7-ந் தேதி திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் முடிந்த 2-வது நாளில் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக்கொண்டு சந்தியா மாயமானார். திருமண மோசடியில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தனபால், பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருமண புரோக்கர் பாலமுருகன், அய்யப்பன், ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
12 மோசடி திருமணங்கள்
இந்தநிலையில் திருமணங்கள் மோசடி கும்பல் இதுவரை 12 திருமணங்கள் நடத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் தலைமறைவான 4 பேரும் வெளிமாநிலத்துக்கு தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிறையில் உள்ள கல்யாணராணி சந்தியாவை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். அப்போது சந்தியா எத்தனை பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்? திருமணம் செய்து கொண்ட வீட்டில் இருந்து பணம், நகை மற்றும் என்னென்ன பொருட்களை அங்கு இருந்து திருடி வந்துள்ளார்? என்பதும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.