தமிழகத்திற்கு 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் - ராமதாஸ்


தமிழகத்திற்கு 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் - ராமதாஸ்
x

மொத்தம் 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இந்தியாவில் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகளுடன் இணைந்து அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன் மத்திய அரசு நிதியுதவியுடன் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 157 மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் கல்லூரிகளையும் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் இதுவரை 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு குறைந்தது 16 மருத்துவக் கல்லூரிகளாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 58 மருத்துவக் கல்லூரிகளிலும், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 24 மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழகத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட கிடைக்கவில்லை. மூன்றாவது கட்டமாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்திற்கு 15 கல்லூரிகளை ஒதுக்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நான் வலியுறுத்தினேன். அதையடுத்து முந்தைய அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட முயற்சியால் தமிழகத்திற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன.

ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு அது போதுமானதல்ல. அதற்கு இன்னும் 6 மருத்துவக் கல்லூரிகள் தேவை. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், அவற்றைத் தொடங்க 6 கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க. அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் கூட, அனைத்து கல்லூரிகளும் ஒதுக்கப்பட்டு விட்டதால், அதற்கு வாய்ப்பில்லை என மத்திய அரசு கூறி விட்டது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வி கற்பது தமிழ்நாட்டில் தான்; அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதும் தமிழகத்தில் தான்; அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவம் பயில விரும்புவதும் தமிழகத்தில் தான்; கடந்த முறை ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை குறித்த காலத்தில் கட்டமைத்து வகுப்புகளைத் தொடங்கியதும் தமிழ்நாடு தான். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, புதிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெறும் தகுதி தமிழ்நாட்டுக்கு உண்டு. எனவே, மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்படவுள்ள 100 மருத்துவக் கல்லூரிகளில், இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாத மாவட்டங்களுக்கு 6, கடலூர் மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு இப்போதிலிருந்தே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story