முதியவரை கத்தியால் வெட்ட முயன்ற 7 பேர் கைது
முதியவரை கத்தியால் வெட்ட முயன்ற 7 பேர் கைது
முதியவரை கத்தியால் வெட்ட முயன்ற 7 பேர் கைது
விழுப்புரம், ஜூன்.28-
விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஊரல்கரைமேடு பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ்(வயது 61). இவருடைய தம்பி மகன் சூர்யா(26) என்பவருக்கும், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(20) தரப்பினருக்கும் கோலியனூரில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று கோகுலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா(23), தமிழ்செல்வன்(26), மாதேஸ்வரன்(23), திலகர்(19), கவுதம்(19), அரவிந்த்(21), கலைச்செல்வன்(21) ஆகிய 8 பேரும் சேர்ந்து ஊரல்கரைமேட்டில் உள்ள தேவதாஸ் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவரிடம் உன்னுடைய தம்பி மகன் எங்கே எனக்கேட்டு அவரை திட்டி தாக்கி கொலை வெறியுடன் கத்தியால் வெட்ட முயன்றனர். இதில் சுதாரித்துக்கொண்ட தேவதாஸ் நகர்ந்து கொண்டார். பின்னர் அவர் கூச்சல்போடவே அங்கிருந்து அவர்கள் 8 பேரும் தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்து தேவதாஸ் கொடுத்த புகாரின் பேரில் 8 பேர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலகிருஷ்ணன், சூர்யா, தமிழ்ச்செல்வன், மாதேஸ்வரன், திலகர், கவுதம், கலைச்செல்வன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.