ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை; தென்காசி கோர்ட்டு தீர்ப்பு


ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை; தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
x

ஆலங்குளம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

தென்காசி

தென்காசி:

ஆலங்குளம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

ரியல் எஸ்டேட் அதிபர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த வேலு மகன் கருப்பசாமி (வயது 33). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிட தொழில் செய்து வந்தார்.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜ் என்ற செல்வராஜ் (49), சுரேஷ் (46), முத்துராஜ் (35), ராஜசேகரன் (37), அருள் பெருமாள் (34), முருகன் (42), ராஜ் (33), வைத்திலிங்கம் (35) உள்பட 9 பேருக்கும் தொழில் ரீதியாக பழக்கம் இருந்து வந்தது. இவர்கள் 9 பேரும் ஆற்று மணல் எடுத்து விற்பனை செய்து வந்தனர்.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் தொழில் காரணமாக இவர்களுக்கும், கருப்பசாமிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. கொலை சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக சுரேசின் மணல் லாரியை போலீசார் கைப்பற்றினர்.

இதற்கு கருப்பசாமி தான் காரணம் என்று 9 பேரும் நினைத்தனர். கடந்த 12-9-2012 அன்று ஆலங்குளத்தில் இருந்து புதுப்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கருப்பசாமியை அவர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர்.

7 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அனுராதா நேற்று பரபரப்பான தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில், மேற்கூறிய 9 பேரில் சம்பவம் நடக்கும் போது ஒருவருக்கு 17 வயது என்பதால் அவர் மீது சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. முத்துராஜ் என்பவர் இறந்து விட்டதால் மீதி உள்ள 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும் இந்த 7 பேரும் தலா ரூ.3,000 அபராதம் கட்ட வேண்டும். இதனை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள், ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலுச்சாமி ஆஜரானார்.


Next Story