புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவிட்டார். இதையடுத்து மயிலாடுதுறையில் 300-க்கும் மேற்பட்ட கடைகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் சாதாரண உடையில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 22 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் அந்த கடைகளுக்கு `சீல்' வைக்கப்பட்டது.
7 பேர் கைது
இதேபோல் குதாலத்தில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் மற்றும் போலீசார் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் 7 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து குத்தாலம் உத்திரமேலவீதியைச் சேர்ந்த சங்கரி (வயது 41), ராமு (42), தேரடியைச் சேர்ந்த ராமு (42), கீழவெளியை சேர்ந்த செல்வராஜ் (60), திருவாலங்காடு சகாயராஜ் (58), சென்னியநல்லூர் முத்துராஜா (40), மல்லியம் சகாபுதீன் (54) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டதுடன், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.