ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2023 12:21 AM IST (Updated: 29 Jan 2023 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

குஜராத் கலவரம் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை பி.பி.சி. நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆவணப்படத்தை இந்தியா மோடிக்கான கேள்விகள் என்ற தலைப்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு திரையிட இந்திய மாணவர் சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்த ஆவணப்படத்தை திரையிட பெரம்பலூர் போலீசார் அனுமதி மறுத்து தடை விதித்திருந்தனர். மேலும் காந்தி சிலை முன்பு பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார் நேற்று காலை முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆவணப்படத்தை திரையிட தடை விதித்ததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் காந்தி சிலை முன்பு திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் அந்த 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலையிலேயே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேலை, அவரது சொந்த ஊரான கை.களத்தூரில் வைத்து போலீசார் கைது செய்து மண்டபத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story