தம்பதியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
தம்பதியிடம் 7 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). சமையல் கலைஞர். இவரின் வீட்டுக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள் விசேஷத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்களை வழியனுப்புவதற்காக கண்ணன் தனது மனைவி விஜயலட்சுமியுடன் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். இதையடுத்து உறவினர்களை ரெயிலில் வழி அனுப்பி வைத்துவிட்டு இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். சென்னை பைபாஸ் சாலை காவிரி பாலத்தின் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர்களை வழி மறித்து விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.