2 வீடுகளில் 7½ பவுன் நகைகள் திருட்டு
2 வீடுகளில் 7½ பவுன் நகைகள் திருட்டுபோனது.
பொன்மலைப்பட்டி:
நகை-வெள்ளிப்பொருட்கள் திருட்டு
*திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலை திருநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மணிமொழி(வயது 56). சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் வீட்டில் இருந்த 3½ பவுன் தங்க நகைகள், சுமார் 250 கிராம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி மேலசிந்தாமணி, காவேரி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(38). இவர் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி தட்டச்சு பயிற்சிக்கு சென்றார். மதியம் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் நகை, கொலுசு, பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு
*திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற முத்துவீரன் (வயது 51). புரோட்டா மாஸ்டரான இவர் திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான மதன்குமாரின் மனைவியிடம் பணம் வாங்கி, அதற்கு வட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில் வட்டி கூடுதலாக கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், மதன்குமார் 2 பேருடன் சேர்ந்து முத்துவீரன் மற்றும் அவரது மகன் சக்திவேல் ஆகியோரை அரிவாளால் வெட்டினார். இது குறித்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்குப்பதிவு மதன்குமார் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
திருட முயன்றவர் கைது
*திருச்சி காந்திமார்க்கெட் மதுரைரோட்டை சேர்ந்தவர் விஜயராஜ்(33). இவர் நேற்று மதியம் தனது நண்பருடன் பஸ்சில் மத்திய பஸ் நிலையத்துக்கு சென்று இறங்கியபோது, அவரது சட்டைப்பையில் இருந்த பணத்தை திருட முயன்ற தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த சேக்தாவூத்தை(38) போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மூதாட்டி சாவு
*தா.பேட்டையில் இருந்து முசிறி செல்லும் மெயின் ரோட்டில் நாமுட்டி பள்ளம் பாலம் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, வாகனம் மோதி இறந்தார்.
*துறையூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த தையல் தொழிலாளியான முகமது இக்பால்(40), தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
*நவல்பட்டு அருகே உள்ள சோழமா நகரை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி புவனேஷ்வரி(33) மாயமானார்.