முன்னாள் சென்ற லாரி மீது கல்லூரி பஸ் மோதி 7 மாணவிகள் காயம்


முன்னாள் சென்ற லாரி மீது கல்லூரி பஸ் மோதி 7 மாணவிகள் காயம்
x

கரூரில் முன்னாள் சென்ற லாரி மீது கல்லூரி பஸ் மோதி 7 மாணவிகள் காயம் அடைந்தனர்.

கரூர்

லாரி மீது மோதல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இயங்கி வரும் விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கரூர் பகுதியை சேர்ந்த மாணவிகள் கல்லூரிக்கு சொந்தமான பஸ் மூலம் தினமும் சென்று வருவது வழக்கம்.அதேபோல் நேற்று காலை கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் கரூர் மாவட்டம் லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஏறி திருச்செங்கோட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டாங்கோவில் பிரிவு அருகே சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த கல்லூரி பஸ் மோதியது.

7 மாணவிகள் காயம்

இதில் பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவிகள் 7 பேர் காயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கரூர் தந்தோணிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதே கல்லூரியைச் சேர்ந்த பஸ் கடந்த மாதம் வெண்ணைமலை அருகே முன்னாள் சென்ற லாரியின் மீது மோதியதில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story