7 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கும் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி
திருமுல்லைவாசலில் 7 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக வீடின்றி சமுதாய கூடத்தில் வசித்து வருவதாக பயனாளிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
சீர்காழி:
திருமுல்லைவாசலில் 7 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக வீடின்றி சமுதாய கூடத்தில் வசித்து வருவதாக பயனாளிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
தொகுப்பு வீடுகள்
தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும், குடிசைகளை அகற்றும் நோக்கத்திலும் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு சார்பில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் முழு மானியத்தில் கட்டப்பட்டு வருகிறது.சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருமுல்லைவாசல் ஊராட்சியில் மேட்டுதெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயக் கூலி தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கும் பணி
இந்த நிலையில் கடந்த 2015-16-ம் ஆண்டு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மேட்டுதெரு பகுதியை சேர்ந்த 12 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான ஆணை கடந்த 2015-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 12 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டு தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.பணிகள் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் முடிவடையாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.. இதனால் பயனாளிகள் அனைவரும் தங்க இடம் இன்றி சமுதாயக் கூடங்களிலும், ஓலை குடிசைகளிலும் வசித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பயனாளிகள் வேதனை தெரிவித்தனர்.
சமுதாய கூடத்தில் வசித்து வருகிறோம்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயனாளி உஷா என்பவர் கூறுகையில் நாங்கள் ஏற்கனவே சிறிய அளவிலான ஓலை குடிசையில் நிம்மதியாக வசித்து வந்தோம். அரசு இலவசமாக தொகுப்பு வீடு கட்டி தருவதாக அறிவித்ததன் பேரில் இருந்த வீட்டை இடித்து விட்டு இடம் கொடுத்தோம். ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும். இதுவரை வீடு கட்டும் பணி முடியாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.நாங்கள் தினமும் கூலி வேலைக்கு சென்றால் தான் குடும்பம் நடத்த முடியும். வீடுகள் இன்றி பலர் சமுதாய கூடங்களில் வசித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
விரைந்து முடிக்க வேண்டும்
பாதிக்கப்பட்ட பயனாளி சித்ரா கூறுகையில், தொகுப்பு வீடுகள் கட்டும் பணி முடிவடையாததால் கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்தோடு சிறிய அளவிலான ஓலை குடிசையில் வாழ்ந்து வருகிறோம். மழை பெய்தால் குழந்தைகளை உறவினர்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.எனவே தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.