மின்வேலியில் சிக்கி விவசாயி இறந்த வழக்கில்நில குத்தகைதாரருக்கு 7 ஆண்டு சிறைவிழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு


மின்வேலியில் சிக்கி விவசாயி இறந்த வழக்கில்நில குத்தகைதாரருக்கு 7 ஆண்டு சிறைவிழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்வேலியில் சிக்கி விவசாயி இறந்த வழக்கில் நில குத்தகைதாரருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையை அடுத்த குலதீபமங்கலம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 56), விவசாயி. அதே கிராமத்தை சேர்ந்த முருகன் (47) என்பவர் கடந்த 2018-ல் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அந்த நிலத்தில் உள்ள விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வந்ததால் அதை தடுக்க நிலத்தை சுற்றிலும் மின்வேலி பாய்ச்சியிருந்தார். அதற்கு அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (46), வேலு (36) ஆகிய 2 பேரும் உதவி செய்தனர்.

இந்நிலையில் அந்த நிலத்தின் வழியாக தங்கவேல் நடந்து சென்றபோது அங்கிருந்த மின்வேலியில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் அதே இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தங்கவேல் மகன் கணேசன் அளித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், மணிகண்டன், வேலு ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், மணிகண்டன், வேலு ஆகிய இருவரையும் விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட முருகன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story