ஓய்வுபெற்ற தீயணைப்புத்துறை ஊழியருக்கு 7 ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓய்வுபெற்ற தீயணைப்புத்துறை ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓய்வுபெற்ற தீயணைப்புத்துறை ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
தீயணைப்புத்துறை ஊழியர்
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 65). இவர் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 24.8.21 அன்று 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் ராமராஜை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
7 ஆண்டு சிறை
இந்த வழக்கை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராமராஜ் என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு நஷ்ட ஈடாக ரூ. 3 லட்சம் வழங்க பரிந்துரை செய்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.