விருதுநகரில் ரூ.70½ கோடியில் கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம்


விருதுநகரில் ரூ.70½ கோடியில்   கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம்
x

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்துக்கு ரூ.70½ கோடியில் கட்டப்படும் புதிய கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்துக்கு ரூ.70½ கோடியில் கட்டப்படும் புதிய கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய கட்டிடம் ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலையில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஏழை பெண் பாண்டிதேவிக்கு சிவகாசி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சித்துராஜபுரம் மேலூர் அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி பணியாளருக்கான பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

புதிய கட்டிடம் கட்டப்பட உள்ள வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட முதல்-அமைச்சர், அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறை சார்ந்த சிறப்பு திட்டங்களின் புகைப்பட கண்காட்சிகளையும் பார்வையிட்டார்.

நினைவுப்பரிசு

விழாவில் கலெக்டர் மேகநாதரெட்டி வரவேற்று பேசினார். அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், தனுஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கபாண்டியன், அசோகன், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் குமார்ஜெயன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சருக்கு பொதுப்பணித்துறை சார்பில் அமைச்சர் எ.வ.வேலுவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் மேகநாதரெட்டியும் நினைவுப்பரிசு வழங்கினர். முடிவில் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் நன்றி கூறினார்.

வரவேற்பு

முன்னதாக மதுரையில் இருந்து விருதுநகருக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் தலைமையில் கே.உசிலம்பட்டி, சத்திரரெட்டியபட்டி விலக்கு, போக்குவரத்து கழக பணிமனை, கலெக்டர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story