70 அடியாக உயர்ந்த நீர்மட்டம்: வைகை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 70 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
70 அடியாக உயர்ந்த நீர்மட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. அணை இந்த ஆண்டில் 2 முறை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. மேலும் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இந்நிலையில் நேற்று தேனி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் இரவு 7 மணியளவில் மீண்டும் 70 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து வைகை அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
அணையின் 7 பிரதான மதகுகள் மற்றும் 7 சிறிய மதகுகள் வழியாக மாலை 4 மணிக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 230 கனஅடி தண்ணீர் உபரியாக திறக்கப்பட்டது. இதையடுத்து இரவு 10 மணி அளவில் வினாடிக்கு 8 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பதற்கு முன்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அணையின் மேல்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள அபாய சங்கு 3 முறை பலமாக ஒலிக்கப்பட்டது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடந்து மழை பெய்து வருவதால் திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறையினர் கூறினர். மேலும் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். அணையின் நீர்மட்டம் மீண்டும் 70 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.