மோர்தானா அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது


மோர்தானா அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது
x

குடியாத்தம் மோர்தானா அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வழிந்தோடுகிறது. அதிகாரிகள் அணையை கண்காணித்து வருகின்றனர்.

வேலூர்

குடியாத்தம் மோர்தானா அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வழிந்தோடுகிறது. அதிகாரிகள் அணையை கண்காணித்து வருகின்றனர்.

700 கனஅடி தண்ணீர்

தமிழகத்தில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் மழையாலும், மோர்தானா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி, புங்கனூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையாலும் ஆந்திர மாநிலம் புங்கனூர் அடுத்த பெத்தபஞ்சாணி பகுதியில் உள்ள மாடிஏரி நிரம்பி வழிவதால், மோர்தானா அணைக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 8 சென்டி மீட்டர் உயந்து, நேற்று மாலை நிலவரப்படி மோர்தானா அணையிலிருந்து வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் வழிந்தோடியது.

இதனால் வருவாய் துறையினரும், நீர்வளத் துறையினரும் 24 மணி நேரமும் அணையை கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் இடதுபுற கால்வாயின் மூலம் 100 கன அடி தண்ணீரும், கவுண்டன்ய மகாநதி ஆற்றில் 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு

தொடர்ந்து மோர்தானா அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின், பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், மோர்தானா அணை நீர் செல்லும் கவுண்டன்ய மகாநதி கரைப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோர்தானா அணையில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில் தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதேபோல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்வது மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

வேலூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில் குடியாத்தம் உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மோர்தானா அணை வெள்ளநீர் செல்லும் பகுதியில் உள்ள ஏரி மற்றும் வலதுபுற, இடதுபுற கால்வாய்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story