ரேஷன் கடைகளில் 7 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை


ரேஷன் கடைகளில் 7 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை
x

வேலூரில் உள்ள 15 ரேஷன் கடைகளில் கடந்த 14 நாட்களில் 7 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

தக்காளி விலை உயர்வு

தமிழகத்துக்கு பிறமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைவு காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை திடீரென உயர்ந்து கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கிலோ கணக்கில் தக்காளி வாங்கி சென்ற ஏழை, எளிய, நடுத்தர மக்கள் விலை உயர்வு காரணமாக தற்போது ½ கிலோ, ¼ கிலோ என வாங்கி செல்கிறார்கள். பல வீடுகளில் தக்காளி சட்னி, தக்காளி தொக்கு, தக்காளி குழம்பு, தக்காளி சாதம் போன்றவை பல நாட்களாக உணவுபட்டியலில் இல்லை. சில வீடுகளில் குறைந்தளவு தக்காளி வாங்கி பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது.

15 ரேஷன் கடைகள்

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் கடந்த 11-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது. வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கழிஞ்சூர், விருப்பாட்சிபுரம், பாகாயம், தாராபடவேடு, காங்கேயநல்லூர், சேண்பாக்கம், அல்லாபுரம், ஆர்.என்.பாளையம், கஸ்பா உள்ளிட்ட 15 கடைகளில் மார்க்கெட் விலையை விட குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் நேற்று முதல் ரகம் தக்காளி கிலோ ரூ.110 முதல் 120-க்கும், 2-ம் ரகம் ரூ.90 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் ரேஷன்கடைகளில் தக்காளி கிலோ ரூ.95-க்கு விற்பனையானது.

7 ஆயிரம் கிலோ விற்பனை

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், தக்காளி விலை உயர்வினால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சியில் உள்ள 15 ரேஷன்கடைகளுக்கும் தினமும் ஆந்திர மாநிலம் பலமநேரில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு ரேஷன்கடைக்கு 50 கிலோ வீதம் தினமும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கொள்முதல் விலைக்கு ஏற்ப ரேஷன்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மளிகை, காய்கறி கடைகளை விட விலை குறைவு என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்ட பணிகளில் ரேஷன்கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் கடந்த சில நாட்கள் தக்காளி குறைவாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 14 நாட்களில் 7 ஆயிரம் கிலோ தக்காளி ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்து 875-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதலாக தக்காளி கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story