708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறக்கப்படும்


708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறக்கப்படும்
x

தமிழகம் முழுவதும் 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திண்டுக்கல்

500 படுக்கைகள் வசதி

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் கூடிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர், வேலுச்சாமி எம்.பி., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., காந்திராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி வரவேற்று பேசினார்.

விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி 500 படுக்கைகள் கொண்ட கட்டிடத்தை திறந்து வைத்தனர். மேலும் அம்மாபட்டி துணை சுகாதார நிலைய புதிய கட்டிடம், கே.புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் செவிலியர் குடியிருப்பு, அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார பொது சுகாதார கட்டிடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தனர்.

11 மருத்துவ கல்லூரிகள்

இதையடுத்து மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தாய்மார்களுக்கு தாய்-சேய் நலபெட்டகங்கள் ஆகியவற்றை அமைச்சர்கள் வழங்கினர். மேலும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் வெள்ளை அங்கி அணிந்து உறுதிமொழி ஏற்றனர். பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டன. இவற்றில் 500 முதல் 700 படுக்கைகளுடன் மருத்துவமனைகள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த ஆண்டு 150 மாணவர்களும், இந்த ஆண்டு 150 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

இதில் 15 சதவீதம் பேர் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் ஆவர். மேலும் 7.5 சதவீத மாணவர்கள் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்றவர்கள். அதன்படி 10 பேர் திண்டுக்கல்லில் சேர்ந்து உள்ளனர். இவர்களுக்கு கல்வி கட்டணம், மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இங்கு பயிலும் மாணவர்கள் உலக அளவில் சிறந்தவர்களாக வரவேண்டும்.

708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள்

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 24 மாவட்ட அரசு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. இதையொட்டி ரூ.2 ஆயிரம் கோடியில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள மருத்துவ கட்டமைப்பை போன்று, 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க உத்தரவிட்டார். இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் 10 இடங்களிலும், கொடைக்கானல் மற்றும் பழனியில் தலா ஒரு இடத்திலும் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைய இருக்கின்றன.

இதில் 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களுக்கு தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்மூலம் திண்டுக்கல் உள்பட மொத்தம் 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார். தமிழகத்துக்கு 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் முதல்-அமைச்சரால் கேட்டு பெறப்பட்டன. அதில் திண்டுக்கல்லுக்கு மட்டும் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

புதிய கட்டிடங்கள்

தமிழகத்தில் 8 ஆயிரத்து 713 துணை சுகாதார நிலையங்களும், 2 ஆயிரத்து 286 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. அதில் ஆயிரம் சுகாதார நிலையங்கள் வாடகை கட்டிடத்திலும், பல சேதமான கட்டிடங்களிலும் இயங்குகின்றன. அதற்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடக்கிறது. எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை தந்தால் அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டிடங்களை கட்டி முடிக்கலாம்.

தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரி என்ற கொள்கையை கருணாநிதி உருவாக்கினார். அதன்படி திண்டுக்கல்லில் கடந்த 2011-ம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி 10 ஆண்டுகள் கழித்து கல்லூரியும், தற்போது மருத்துவமனையும் திறக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கருணாநிதியின் நேர்மை

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், தமிழகத்தில் அரசு சலுகைகள், இடஒதுக்கீடு கிராமங்களை சென்றடைகிறது. இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க முடிகிறது. இந்த ஒதுக்கீடு முன்பே இருந்தால் நானும் மருத்துவர் ஆகி இருப்பேன். நான் 30 பேருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்து படிக்க வைத்து இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதேபோல் மாவட்டத்தில் பணியாற்றும் 90 சதவீத செவிலியர்கள் நான் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 1989-ம் ஆண்டு எனது சகோதரி மகனுக்கு மருத்துவ கல்லூரி இடம் கேட்டு, அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் சென்றேன். ஆனால் அவர் நேர்மையாக செயல்பட்டு, எனது சகோதரியின் மகனுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் தரமறுத்து விட்டார்.

சமுதாயம், பொருளாதார வளர்ச்சி

அதேநேரம் வெளிமாநில ஒதுக்கீட்டில் காலியாக 147 மருத்துவ இடங்கள் இருந்தன. அதை அறிந்து நான் வழக்கு தொடர்ந்தேன். அதன்மூலம் 147 பேருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் மருத்துவம் உள்பட பல துறைகளில் சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. இதில் தமிழகத்துக்கு கிடைத்த 25 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 திண்டுக்கல்லுக்கு கிடைத்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஒரே ஆண்டில் 5 கல்லூரிகளை கொடுத்தார். கல்வி தான் ஒரு சமுதாய முன்னேற்றத்தின் அடித்தளம் ஆகும். சமுதாய வளர்ச்சியால் பொருளாதார மேம்பாடு ஏற்படும். இதற்காக செயல்திறனோடு 24 மணி நேரமும் முதல்-அமைச்சர் உழைத்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்துக்கு மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேலும் தரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, துணை இயக்குனர்கள் வரதராஜன், அனிதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் வீரமணி, பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவ கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம், மாணவர்களின் சிலம்பாட்டம் ஆகியவை நடந்தன.


Next Story