3 கார்களில் கடத்தப்பட்ட 728 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தாளமுத்துநகர், பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் 3 கார்களில் கடத்தப்பட்ட 728 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஏழு பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர், பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் 3 கார்களில் கடத்தப்பட்ட 728 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புகையிலை

தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர்ந்து புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை நடந்து வருகிறது. இந்த நிலையில் தென்மண்டல ஐ.ஜி. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தூத்துக்குடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தாளமுத்துநகர் பகுதியில் வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. உடனடியாக தனிப்படை போலீசார் காரில் இருந்த 282 கிலோ புகையிலை பொருட்களையும், அதனை கடத்தி வந்ததாக தூத்துக்குடி பாக்கியநாதன்விளையை சேர்ந்த போவாஸ் (வயது 33), இந்திராநகரை சேர்ந்த ராஜே ஷ் (40), கீழஅழகாபுரியை சேர்ந்த முத்துக்குமார் (30) ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 282 கிலோ புகையிலை பொருட்கள், கார், ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் எபனேசர், எலியாஸ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

பணிக்கநாடார் குடியிருப்பு

இதே போன்று குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அங்கு வந்த கார்களை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 2 கார்களில் ஆறுமுகநேரி மேல நவலடிவிளையை சேர்ந்த ஹரிராமன் மகன் பாலகிருஷ்ணன் (42), சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் சேர்மதுரை (35), ஆறுமுகநேரி பூவரசூரை சேர்ந்த காசி மகன் சத்தியராஜ் (35) மற்றும் நாசரேத் நல்லன்விளையை சேர்ந்த செல்லையா மகன் குமார் (48) ஆகியோர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் 4பேர் கைது

உடனடியாக போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 446 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள், ரொக்கப்பணம் ரூ.13 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story