74,410 பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர்


74,410 பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர்
x

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 74,410 பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 130 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பலர் வாடகை வீடுகளில் வசிப்பதாலும், வீட்டின் உரிமை தொடர்பாக சட்ட சிக்கல் ஏற்படுமோ? என்ற அச்சத்திலும் தயங்குகிறார்கள். இருந்தபோதிலும் பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் ஆதார் எண்ணை மின்இணைப்புடன் இணைத்து வருகிறார்கள். இதற்காக மின்வாரிய அலுவலகங்களுக்கு சென்று வரிசையில் காத்திருந்து ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

நெல்லை மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மொத்தம் வீட்டு மின் நுகர்வோர் எண்ணிக்கை 10 லட்சத்து 58 ஆயிரத்து 934 ஆகும். இதில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 74,410 பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

நெல்லை பழைய பேட்டை, பேட்டை, தச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகங்களில் மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணியை, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி நேற்று ஆய்வு செய்தார். அப்போது உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி மின் பொறியாளர்கள் அருணன், சரவணன், சரவணக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுதவிர நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி உத்தரவுப்படி கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்இணைப்பு பெயர் மாற்றும் முகாம் நடைபெற்றது. இதில் 26 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 25 விண்ணப்பங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் இதற்கான ஆணைகளை நுகர்வோருக்கு வழங்கினார்.


Next Story