பசுமாட்டின் வயிற்றில் 75 கிலோ பிளாஸ்டிக்பைகள்
தஞ்சையில் சாலையில் சுற்றித்திரிந்த போது மீட்கப்பட்ட பசுமாட்டின் வயிற்றில் இருந்து 75 கிலோ பிளாஸ்டிக் பைகள் அகற்றப்பட்டன.
தஞ்சாவூர்;
தஞ்சையில் சாலையில் சுற்றித்திரிந்த போது மீட்கப்பட்ட பசுமாட்டின் வயிற்றில் இருந்து 75 கிலோ பிளாஸ்டிக் பைகள் அகற்றப்பட்டன.
மயங்கி கிடந்த பசுமாடு
தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் உள்ள சிட்கோ வளாகத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி ஒரு பசுமாடு மயங்கிய நிலையில் கிடந்தது. இது குறித்து அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவர் குழுவினரோடு சேர்ந்து அந்த மாட்டை மீட்டு பாதுகாப்பாக பராமரித்து வந்தனர். ஆனால் அந்த மாட்டை தேடி அதன் உரிமையாளர் யாரும் வரவில்லை.இந்த நிலையில் அந்த மாடு கன்று ஈன்றது. அந்த கன்று இறந்து விட்டது. இருப்பினும் மாட்டிற்கு வயிறு வீக்கம் குறையாமல் இருந்தது. இதையடுத்து மாட்டை பரிசோதனை செய்வதற்காக ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் குழுவினர் மாட்டிற்கு ஸ்கேன் செய்து பார்த்த போது அதன் வயிற்றில் பிளாஸ்டிக்பைகள் இருந்தது தெரிய வந்தது.
75 கிலோ பிளாஸ்டிக் பைகள்
இதையடுத்து நேற்று பசுமாட்டிற்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில் மாட்டின் வயிற்றில் இருந்து 75 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தி மாட்டிற்கு உரிய சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மாடு தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டு, அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை குழுவினர் பராமரித்து வருகின்றனர்.