காரில் கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
காரில் கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கொல்லங்கோடு:
நித்திரவிளை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை மங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்கடையில் இருந்து ஒரு கார் சந்தேகப்படும் வகையில் வேகமாக வந்தது. இதைகண்ட போலீசார் காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். உடனே போலீசார் தங்களது வாகனங்களில் விரட்டிச் சென்று காரை மடக்கிப் பிடித்தனர். அதைதொடர்ந்து காரை சோதனை செய்தபோது அதில் சிறு சிறு மூடைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரள மாநிலம் உச்சக்கடையை சேர்ந்த அசோக்(வயது 32) என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்த அரிசியை காருடன் கிள்ளியூர் வட்ட வழங்கல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் அசோக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.