ரூ.76 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்


ரூ.76 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2023 2:52 AM IST (Updated: 13 Jun 2023 2:01 PM IST)
t-max-icont-min-icon

ரூ.76 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்


ரூ.76 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறுவை தொகுப்பு திட்டம்

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தண்ணீர் திறந்து விட்டதுடன், ரூ.75 கோடியே 95 லட்சம் மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டத்தையும் அறிவித்துள்ளார். இதற்கு டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன் முதல்-அமைச்சருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

தோழகிரிப்பட்டியை சேர்ந்த விவசாயி கோவிந்தராசு:- தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணியை பார்வையிட வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்த ஆண்டும் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று ரூ.75 கோடியே 95 லட்சம் மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். இதனால் டெல்டா விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி மற்றும் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன். இந்த தொகுப்பு திட்டத்தால் 5 லட்சம் ஏக்கரை விட கூடுதலாக சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க வேண்டும்.

மகிழ்ச்சி

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன்:- மேட்டூர் அணையை திறந்து வைத்து குறுவை தொகுப்பாக ரூ.75 கோடியே 95 லட்சம் அறிவித்துள்ள தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த அறிவிப்பும், மேட்டூர் அணை திறப்பும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலதாமதப்படுத்தாமல் குறுவை தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு தொடர்ந்து தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீட்டை கர்நாடகாவிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்.

மும்முனை மின்சாரம்

புலவன்காட்டை சேர்ந்த விவசாயி மாரியப்பன்:- குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் இந்த ஆண்டும் அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு 2 ஏக்கர் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு விதைநெல், உரங்கள் வழங்கப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு 1 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இடுபொருட்கள் விலை அதிகரித்து இருக்கிறது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு ஆகிறது. இதனால் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் செலவும் குறையும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள இந்த நேரத்தில் மும்முனை மின்சாரம் 20 மணிநேரம் கொடுக்க வேண்டும். அப்போது தான் விவசாய பணிகளை விரைந்து முடிக்க முடியும். நுண்ணூட்ட சத்துக்கள் பற்றாக்குறை உள்ளது. அரசே இவற்றை கொடுக்க வேண்டும். இயற்கை சார்ந்த உரங்களை கொடுத்தால் தான் மண்வளத்தை பாதுகாக்க முடியும்.


Next Story