ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 77 பேர் கைது


ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 77 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஊட்டியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரசார் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

ஊட்டி,

ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஊட்டியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரசார் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதவி நீக்கம்

பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசிய வழக்கில், ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார்.

77 பேர் கைது

மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ராஜீவ்காந்தி சிலை முன்பு இருந்து காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பியவாறு ஊட்டி சிறப்பு மலை ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையம் நோக்கி வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா, இன்ஸ்பெக்டர்கள் மீனா பிரியா, முரளிதரன் மற்றும் போலீசார் ரெயில் நிலைய நுழைவுவாயிலில் இரும்பு தடுப்புகள் வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது காங்கிரசார் மத்திய அரசை கண்டித்தும், ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் பிரியா நஸ்மிகர், நகர தலைவர் நித்திய சத்தியா என 13 பெண்கள் உள்பட 77 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.


Next Story